ஈரோடு கருங்கல்பாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்; மாற்று இடம் வழங்குவதாக உறுதி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார். மாற்று இடம் வழங்குவதாக உறுதி அளித்தாா்.;

Update:2022-08-05 03:24 IST

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரையை ஒட்டி உள்ள 11 வீடுகள் மற்றும் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனடியாக அந்த வீடுகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவர் வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு பாதிப்பு அடைந்த பொதுமக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.காவிரிக்கரையில் புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 11 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதி, மருத்துவ வசதி உடனடியாக செய்யவும், அவர்கள் பாதுகாப்பு கருதி கருங்கல்பாளையம் மகளிர் பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 31 பேர் மாற்று இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், தாசில்தார் (பொறுப்பு) ரவிச்சந்திரன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், சின்னையன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்