மணலூர்பேட்டையில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
மணலூர்பேட்டையில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் செல்வம்(வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு மணலூர்பேட்டை மிளகு விநாயகர் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டிருக்கிறார். இதில் காரில் இருந்த மணலூர்பேட்டை தெற்கு சாலியர் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் மோகன்ராஜ்(39), திருவண்ணாமலை மாவட்டம் கொளப்பாபட்டு கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ்(28) ஆகியோர் போலீஸ்காரர் செல்வத்தை ஆபாசமாக திட்டியதுடன், அவரிடம் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.