சுல்தான்பேட்டையில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தல்
சுல்தான்பேட்டையில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிபட்டி, குமாரபாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்தநிலையில், ஊராட்சிகளில் நடைபெறும் அனைத்து திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) மகேஷ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆணையாளர் முத்துராஜ் வரவேற்றார். கூட்டத்தில், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து தரமாக முடிக்க வேண்டும். கொரோனா, டெங்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சுகாதார பராமரிப்பு மற்றும் தூய்மையான பாதுகாப்பான குடிநீர் வழங்கல் நடவடிக்கையில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒன்றிய அலுவலக மேலாளர் அந்தோணி ஆரோக்கிய செல்வன் நன்றி கூறினார்.