திருவாரூரில், இஞ்சி விலை 3 மடங்கு உயர்வு

வரத்து குறைவால் திருவாரூரில் ரூ.70-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி தற்போது 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.260-க்கு விற்கப்படுகிறது.

Update: 2023-05-21 18:45 GMT

கொரடாச்சேரி:

வரத்து குறைவால் திருவாரூரில் ரூ.70-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி தற்போது 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.260-க்கு விற்கப்படுகிறது.

அன்றாட பயன்பாட்டிற்கு தேவை

திருவாரூரில் கடந்த மாதம் ரூ.70-க்கு விற்கப்பட்ட இஞ்சி ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து இஞ்சியின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இஞ்சியின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது 3 மடங்கு விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவை சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளாக இருக்கின்றன. இதில் இஞ்சி அசைவ மற்றும் சைவ உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து அசைவ உணவு வகைகளிலும் இஞ்சி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்பது உள்ளது.

வரத்து குறைவு

எனவே உணவகங்கள், தேநீர் கடைகள், வீடுகள் என பல தரப்பினரும் இஞ்சியை தினமும் வாங்கி உணவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இஞ்சியின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக இஞ்சி, பங்களாதேஷ், ராஜஸ்தான், ஓசூர் போன்ற இடங்களில் இருந்து திருவாரூர் காய்கறி மார்க்கெட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இஞ்சி விளையும் இடங்களில் கனமழை நீடிப்பதால் இஞ்சி அறுவடை செய்ய ஆட்கள் வராத காரணத்தினால் வரத்து குறைந்துள்ளதாகவும் எனவே விலை உயர்ந்து காணப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று ரூ.15-க்கு விற்பனை செய்து வந்த கத்தரிக்காய் தற்போது ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு

மேலும் ரூ.30-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், ரூ.30-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணம் இந்த காய்கறிகள் விளைவிக்க கூடிய பருவம் தற்போது இல்லாத காரணத்தினாலும், வரத்து குறைவாக இருப்பதுமே ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்