கன்னியாகுமரியில் 150 அடி உயர பிரமாண்ட தேசியக் கொடிக்கம்பம் திறப்பு..!

கன்னியாகுமரி அருகே ரூ.75 லட்சம் செலவில் நிறுவபட்ட 150 அடி உயர தேசியக் கொடிக்கம்பத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியேற்றினார்.

Update: 2022-06-29 07:29 GMT

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் விஜயகுமார் எம் .பி. வலியுறுத்தி வந்தார்.

அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு விஜயகுமார் எம். பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துஉள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.75 லட்சம் செலவில் 150அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டுஉள்ளது.

இதில் பறக்க விடப்பட்டுள்ள தேசியக்கொடியின் அளவு 32 அடி அகலமும் 48 அடி நீளமும் ஆகும். இந்த 150 அடி உயர பிரமாண்ட தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மகாதனபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் விஜயகுமார் எம்.பி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் திருவனந்தபுரம் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

இந்த பிரமாண்ட தேசியக் கொடி கம்பத்தில் பறக்க விடப்படும் தேசியக்கொடி வருடத்தில் 365 நாட்களும் இரவும் பகலுமாக 24 மணிநேரமும் பறக்கவிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு வசதியாக தேசியக்கொடியை மின்னொளியில் மிளிர செய்யவதற்காக மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்