வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ரெயிலில் அடிபட்டு 4 பேர் பலி

வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2023-06-27 12:14 GMT

சென்னை வில்லிவாக்கம் இ.கே.எம் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). கூலித் தொழிலாளியான இவர், திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் நேற்று காலை திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் திருமுல்லைவாயல் பெரியார் நகரை சேர்ந்தவர் மோகனா (61). இவரும் திருமுல்லைவாயல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதி பலியானார்.

மேலும் ஆவடி - இந்து கல்லூரி ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 40 வயது ஆண் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் ஆவடி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே உள்ள தண்டவாளத்தை நேற்று கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெயில்வே போலீசார் விசாரணையில், ரெயில் மோதி இறந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 80) என்பதும், உறவினர் வீட்டிற்கு கும்மிடிப்பூண்டிக்கு வந்திருந்த நிலையில் இந்த விபத்து நடந்திருப்பதும் தெரிய வந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உயிரிழந்த முதியவர் லோகநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்