கட்டுமான நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
கோவை வடவள்ளியில் கட்டுமான நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.;
வடவள்ளி
கோவை வடவள்ளியில் கட்டுமான நிறுவன இயக்குனர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள்
கோவையை அடுத்த வடவள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன.
கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கார்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அத்துடன் யாரையும் உள்ளேயும் விடவில்லை.
வீடுகளிலும் சோதனை
அதுபோன்று இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரின் வீடு களில் தலா 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன?, அதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு?, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் எப்படி வந்தது? வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
முக்கிய ஆதாரங்கள்
அத்துடன் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது?, அவற்றின் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? அதற்கு வருமானவரி செலுத் தப்பட்டு உள்ளதா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டனர்.
மேலும் அதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் என்னென்ன ஆதாரங்கள் கிடைத்தது என்பது தெரிய வில்லை. தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.
இந்த சோதனை காரணமாக கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம், இயக்குனர்களின் வீடுகள் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.