எனக்கு வழிகாட்டியவர் விஜய்.. என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான்: கண்கலங்கி பேசிய செங்கோட்டையன்

தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.;

Update:2025-12-27 10:50 IST

திருப்பூர்,

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் பேசியதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும். ஆனால் வேகம் இருக்காது. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் த.வெ.க.வின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது. பெரும்பாலான அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்கள் 1 அல்லது 2 மணிநேரத்தில் எழுந்து சென்று பாதி நாற்காலிகள் காலியாக இருக்கும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தேவையில்லை நமது தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று இளைஞர்கள் வருகிறார்கள்.

இந்த கூட்டத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த கூட்டத்தை பார்த்து ஆளும், எதிர்க்கட்சியினர் தேர்தல் களத்தில் நிற்கலாமா? வேண்டாமா? என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்கள் பிப்ரவரி மாதத்துக்கு பின் தேர்தலில் நிற்க ஆள் தேடுவார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

ஆண்டுக்கு ரூ.1000 கோடி சம்பாதிப்பவர் சம்பாத்தியம் தேவையில்லை மக்கள் நலன்தான் முக்கியம் என்று வந்துள்ளார். மே மாதத்துக்குப்பின் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும். பணம் இல்லாமல் சேர்ந்த கூட்டம் இது. இங்கு நீதி, நியாயம் இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு நிறைய மாற்றங்கள் நடக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்.

வழி தெரியாமல் இருக்கின்ற பொழுது நமக்கு வழிகாட்டியவர் அவர் (விஜய்). இன்றைக்கு சொல்கிறேன்.. ‘எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்’. கேட்காமலே நமக்கு கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்துள்ளார்; அவர்தான் நமது வெற்றி தளபதி... ஜெயலலிதாவுடன் பயணித்தபோது நான் ஒருவரை அடையாளம் காட்டினேன்... ஆனால் அவர் இன்று என்னை அடையாளம் காட்டிவிட்டு சென்றுவிட்டார். நல்ல இடத்திற்கு போங்கள் என அடையாளம் காட்டியுள்ளார். இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அவருடன் பயணித்தால் நான் பின்னோக்கி சென்றிருப்பேன்; ஆனால் உங்களுடன் (தவெக) பயணிப்பதால் முன்னோக்கி சென்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்