கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குளு, குளு சீசன் முடிவடையும் நிலையில் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2022-07-02 14:42 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி, நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

தூண்பாறை, குணாகுகை, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். ஏரியை சுற்றிலும் சைக்கிள், குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

இதேபோல் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பரிசல் சவாரி, சாகச விளையாட்டு ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கொடைக்கானல் நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. சீசன் முடிவடைய உள்ளதால், தற்போது தங்கும் விடுதிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சுற்றுலாப்பயணிகள் கூடுதலாக சில நாட்கள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருப்பதால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்