கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-12-11 18:45 GMT

தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர் மழை

மாண்டஸ் புயல் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக சாரல் மழை பெய்தது. கிருஷ்ணகிரியில் சாரல் மழை பொழிவு குறைந்து பிற்பகலில் வெயில் தாக்கம் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் கிருஷ்ணகிரியில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதேபோல் ஓசூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை பொழிவு காணப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

சின்னாறு அணை-30, சூளகிரி- 29, ஓசூர்- 25.7, கிருஷ்ணகிரி-24.6, ராயக்கோட்டை-21, கெலவரப்பள்ளி அணை- 18, பாம்பாறு- 14.60, ஊத்தங்கரை- 12, தேன்கனிக்கோட்டை- 11.60, கிருஷ்ணகிரி அணை-11.20, தளி-10, நெடுங்கல்- 9.2, பெனுகொண்டாபுரம்-6.2, அஞ்செட்டி-5.5, போச்சம்பள்ளி-4.5 மி.மீ. மழை பதிவானது.

நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 576 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 794 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 39.28 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 740 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே போல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 832 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,083 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 50.50 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்