சாலையை சீரமைக்க வலியுறுத்திதீச்சட்டி எடுத்து மனு கொடுக்க வந்த வியாபாரி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சாலையை சீரமைக்க வலியுறுத்தி தீச்சட்டி எடுத்து மனு கொடுக்க வந்த வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-24 18:45 GMT

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன். இவர், பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அவர் தலைமையில் பூதிப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன், கேரள புத்திரன் தனது கையில் தீச்சட்டி ஏந்தியபடி வந்தார். மக்களில் சிலர் அ.தி.மு.க. கட்சிக்கொடியை பிடித்தபடியும் வந்தனர்.

அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், 'தேனியில் இருந்து எங்கள் ஊருக்கு வரும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. சாலை சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏலம் நடத்த இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும், எங்கள் ஊரில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்' என்றனர். அவர்களிடம் தீச்சட்டியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று போலீசார் கூறினர். பின்னர் அவர்கள் தீச்சட்டியை வெளியே வைத்து விட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்