கறம்பக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கறம்பக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-09-13 19:03 GMT

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் இந்து முன்னணி மற்றும் அமைப்புகளின் சார்பில் சீனிகடை முக்கம், பஸ்நிலையம், தென்னகர், சடையன் தெரு, நரங்கியப்பட்டு உள்ளிட்ட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கான விஜர்சன ஊர்வலம் வருகிற 21-ந் தேதி மாலையில் நடக்கிறது. இதையொட்டி விநாயகர் சிலை அமைப்பு குழுவினருக்கு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. கறம்பக்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு, சிலை உடைப்பு, போலீஸ் தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஆய்வு செய்தார். விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளை பார்வையிட்டு போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் திருமணஞ்சேரி அக்னி ஆற்றுக்கு சென்று சிலைகள் கரைக்கப்படும் பகுதியையும் பார்த்தார். இந்த ஆய்வின்போது ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்