கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கப்படும்

கடைகளின் பெயர் பலகை தமிழில் வைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்தார்.;

Update:2023-03-09 00:05 IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வருகிற மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மத்திய அரசு உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டத்தை அறிமுகம் செய்தபோது, 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. தற்போது அதை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என மாற்றியமைத்து உள்ளது. அந்த லைசென்சை ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். தற்போது ஜி.எஸ்.டி. மூலம் வருவாய் அதிகரித்து உள்ள நிலையில், மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி விதிப்பை எளிமையாக்கி, அதன் வருவாயில் 2 சதவீதம், வணிகர் நலனுக்காக ஒதுக்கீடு செய்து, வயது முதிர்ந்த மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள சிறிய வியாபாரிகளுக்கு, மாதம் தோறும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய அரசால் தொடங்கப்பட்ட வணிகர் வாரியம் செயல்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடைகளின் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவற்றை வணிகர் சங்க பேரமைப்பு மனதார ஏற்றுக்கொண்டு, கால அவகாசம் பெற்று கடைகளின் பெயர் பலகையை தமிழாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். அரசுத்துறை அலுவலகங்களின் கடிதங்கள் மற்றும் உத்தரவுகள் ஆங்கிலத்தில் வருகிறது. அதனை முழுமையாக தமிழாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம். தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர் இதுவரை 27 ஆயிரம் பேர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். முதலில் வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட்டு வெளியேறினர். மாநில அரசும், வணிகர் சங்க பேரமைப்பும், நேரடியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று அவர்களை தைரியப்படுத்தி ஆறுதல் சொன்னபின், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது கணிசமாக குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேரமைப்பின் துணை தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்