முன்னாள் ராணுவ வீரர்களுக்கு போலீஸ் பணியில் 5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Update: 2022-08-02 01:23 GMT

சென்னை:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமா அகர்வால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸ்துறைக்கு நடத்தப்படும் தேர்வில் முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த 24.2.2011 அன்று ஆணையிடப்பட்டது.

முன்னாள் படைவீரர் நல இயக்குனரகத்தின் இணை இயக்குனரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வி.எஸ்.ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கடந்த 24.12.2019 அன்று எழுதிய கடிதத்தில், 'முன்னாள் ராணுவ வீரர்கள் இளம் வயதில் ராணுவப்படையில் இருந்து ஓய்வு பெறுவதால் வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்கு இந்த இட ஒதுக்கீடு பயன்படுகிறது.

ஆனால் முன்னாள் துணை ராணுவப்படை பணியாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதால் இந்த ஒதுக்கீட்டை அவர்களுக்கு விரிவுப்படுத்தினால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மறுவேலைவாய்ப்பு உரிமைகளை இழக்க செய்யும்' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு 18.4.2022 அன்று வெளியிட்ட சிறப்பு விதிகளின்படி 5 சதவீத இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே என தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே தமிழக அரசின் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி, 2-ம் நிலை போலீசார் 3,552, சிறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 30.6.2022 அன்று வெளியிட்ட அறிவிக்கையில், முன்னாள் துணை ராணுவ பணியாளர்கள் தவிர்த்து, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்