சென்னை அண்ணா பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்

சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2022-07-20 19:42 IST

சென்னை,

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் 189 அணிகள் பொதுப் பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்துகொள்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பாக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுமட்டுமல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. செஸ் தீம்-களை கொண்டு முக்கிய சாலைகளுக்கு வண்ணம் தீட்டுவது, நடனமாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, விளம்பரப் பாடல் வெளியிடுவது என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா வரும் 28ம் தேதி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

அதேபோல் வரும் 29ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சரும் அண்ணா பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி, துணை வேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் ஜூலை 28,29 ஆகிய இரு நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்