விழுப்புரத்தில் இன்று நடைபெறும் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
மத்திய அரசை கண்டித்து இன்று விழுப்புரத்தில் நடைபெறும் தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
விழுப்புரம்,
மகளிரணி ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில மகளிரணி பிரசார இணை செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. ஆளுகின்ற மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கு நடந்த கலவரத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கலவரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் பெண் அடிமைத்தனத்தை ஒழித்து திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் மு.க.ஸ்டாலின். மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் நமது எம்.பி.க்கள் கேள்வி கேட்டால் பதில் இல்லை. நாளை (அதாவது இன்று) மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெறும் மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.வை மக்கள் விரட்டி அடிப்பார்கள்
மணிப்பூர் சம்பவம் குறித்து மற்ற பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் பா. ஜனதாவுக்கு பெண்கள் ஓட்டு போட மாட்டார்கள். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் விரட்டி அடிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா, மாநில ஆதிதிராவிடர் அணி இணை அமைப்பாளர் புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் தயா இளந்திரையன், கற்பகம், நகர செயலாளர் சக்கரை மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, காணை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி, விக்கிரவாண்டி ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மைதிலி, பிரேமா அல்போன்ஸ் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரேமா குப்புசாமி, மார்த்தாள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.