காங்கயத்தை சேர்ந்தவர் லட்மணன் என்ற லட்சுமணகாந்தன் (வயது 47). மாற்றுத்திறாளி. இவர் சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறார். தமிழக மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணித்தேர்வில் கலந்து கொண்டு தமிழக அணியான சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். காசி தமிழ் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி வாரணாசியில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியில் விளையாடிய லட்சுமண காந்தன் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் கடந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் அரியலூரைச் சேர்ந்த கார்த்தி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் சிவா மற்றும் காங்கயத்தை சேர்ந்த லட்சுமண காந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜூன் மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 20-20 கிரிக்கெட் போட்டியில் இவர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இவருக்கு காங்கயம் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.