கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் சோதனை மேற்கொண்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-08-03 22:39 IST

பொள்ளாச்சி, 

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் சோதனை மேற்கொண்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இதை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் காய்கறி வாகனங்களில் நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவை சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், சந்திரசேகர் மற்றும் போலீசார் தமிழக-கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்கப்படும்

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மொபட், வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்து உள்ளது. தற்போது காய்கறி வாகனங்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்து, அதன் மேல் காய்கறி மூட்டைகளை அடுக்கி கேரளாவுக்கு கடத்துவதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் உள்ள மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, வாளையார், வேலாந்தவளம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் அனைத்து காய்கறி வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசியை கடத்துவது சட்டப்படி குற்றமாகும். ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்