கிளாம்பாக்கத்தில் 24 பஸ்களுக்கு அபராதம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

பஸ் நிறுத்தம் உள்ள இடங்களில் பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும் என்று பஸ் டிரைவர்களிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் கூறினார்.

Update: 2024-05-24 04:06 GMT

சென்னை,

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலைகளில் 'நோ பார்க்கிங்' மற்றும் நிறுத்தம் இல்லாத இடங்களில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஆம்னி பஸ், மாநகர பஸ் உள்பட 24 பஸ்களுக்கு நேற்று செம்மஞ்சேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார், தலா ரூ.1,000 அபராதம் விதித்து அதற்கான ரசீதுகளை டிரைவரிடம் வழங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர்கள், "வழக்கம்போல் நாங்கள் பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறோம். ஆனால் இன்றைக்கு மட்டும் திடீரென அபராதம் விதிக்கப்படுவது ஏன்? என கேட்டனர்.

அதற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார், "பஸ் நிறுத்தம் உள்ள இடங்களில் பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். 'நோ பார்க்கிங்' இடங்களில் பயணிகளை இறக்கி விடுவது குற்றமாகும். இதனால் பயணிகள் சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் சென்று இறக்கிவிட வேண்டும். இது ஒன்றும் புதிதல்ல வழக்கமான நடைமுறைதான்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்