மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை

சோமரசம்பேட்டை அருகே புல் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-06-08 01:01 IST

சோமரசம்பேட்டை, ஜூன்.8-

சோமரசம்பேட்டை அருகே புல் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயியின் மனைவி

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் கல்லாமணிகரை கிராமத்தை சேர்ந்தவர் மலை கொழுந்தன். விவசாயி. இவரது மனைவி அக்கம்மாள் (வயது 65). இந்த தம்பதிக்கு அயினாள் என்ற மகளும், வைரமணி என்ற மகனும் உள்ளனர். மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆனதால் தம்பதி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த வயதான தம்பதி ஆடு, மாடுகள் வளர்த்து அதில் இருந்து வரும் வருமானம் மூலம் தங்கள் குடும்ப செலவுகளை கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் அக்கம்மாள் ஆடு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள சோளக்காட்டுக்கு சென்றார். ஆனால் இரவு ஆகியும் அக்கம்மாள் வீடு திரும்பவில்லை.

பிணமாக...

இதனால் அதிர்ச்சி அடைந்த மலை கொழுந்தன் தனது மகன், மகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியுடன் அக்கம்மாளை தேடினார். இரவு முழுவதும் தேடியும் அக்கம்மாள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் குடும்பத்தினர் அக்கம்மாளை தேடிச்சென்றனர்.

பேரன் தினேஷ்குமார் சோளக்காட்டில் தேடிய போது, அங்கு அக்கம்மாள் காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது, அக்கம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி, தோடு உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

கொலை

யாரோ மர்ம ஆசாமிகள் மூதாட்டியை பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நகைளை பறித்து சென்றுள்ளனர். மூக்குத்தியை கழற்ற முடியாததால் அதனை ஆசாமிகள் விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வாசுதேவன், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லீலீ சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொன்று நகைகளை பறித்துச் சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர். புல் அறுக்க சென்ற மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்