மதத்தை வைத்து வேற்றுமையை விதைக்கும் திமுக - தமிழிசை கண்டனம்

கிறிஸ்மஸ் விழாவில் வாழ்த்து சொல்லி பேசுவதை விட பாஜகவிற்கு எதிராக விஷத்தை முதலமைச்சர் கக்கி இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update:2025-12-21 20:45 IST

சென்னை,

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கிறிஸ்மஸ் விழா பேருரையை கேட்டேன்... ஒரு முதலமைச்சர் இதைவிட மத வேற்றுமையோடு ஒரு விழாவில் பேச முடியாது.. கிறிஸ்மஸ் விழாவில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி பேசுவதை விட பாஜகவிற்கு எதிராக விஷத்தை கக்கி இருக்கிறார். அனைத்து மதத்தினரும் வாழ்த்துக்களையும் உணவுகளையும் விழாக்களின் போது பரிமாறிக் கொள்வதுதான் தமிழகம் என்று சொல்லும் முதலமைச்சரே.. நீங்கள் என்றாவது இந்து மத விழாக்களுக்கு இந்து சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை என்றாவது பரிமாறி இருக்கிறீர்களா.?

இந்து மதத்தை பார்த்து எந்த அளவிற்கு உங்களது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்து விட்டு.. இன்று மத வேற்றுமையை கிறிஸ்மஸ் மேடையில் விதைத்து விட்டு... மற்றவர்கள் வேற்றுமைப்படுத்துகிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை குறை கூறுவதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை... மதத்தை வைத்து உங்களை ஒருவர் அணுகுகிறார் என்றால் சந்தேகத்தோடு பாருங்கள் என்று பைபிள் வாசகங்கள் இருக்கிறது என்று பெருமையாக குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்தால் பகவத் கீதை வாசகங்களை என்றாவது குறிப்பிட்டு இருக்கிறீர்களா? ஏன் இந்த இந்துக்கள் மீது உங்களுக்கு இவ்வளவு பகை. இப்படி மத சார்பாக பேசிவிட்டு எப்படி மதச்சார்பின்மையாளர் என்று நீங்கள் உங்களை சொல்லிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் எங்களுக்கு துணை நிற்க வேண்டும் நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆக இதற்காக மட்டுமே நீங்கள் இந்துக்களை வஞ்சிக்கிறீர்கள். எந்த இந்துவும் மாற்று மதத்தை பகைவராக கருதுவதில்லை. ஆனால் முதல்வராக இருக்கும் நீங்கள் இந்து பகையை விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. இது மன்னிக்க முடியாத குற்றம். மதச்சார்பின்மையை பேசுவதற்கு தங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதை தான் இங்கே வலிமையாக நான் பதிவு செய்கிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்