கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Update: 2022-10-03 19:30 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கொடைக்கானலில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் இதயத்தில் நீங்காத இடம் பிடிக்கும் சிறந்த சுற்றுலா இடமாக பேரிஜம் ஏரி திகழ்கிறது. இது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இங்கு சென்று பார்க்க வனத்துறையினரிடம் உரிய கட்டணம் செலுத்தி சுற்றுலா பயணிகள் அனுமதி சீட்டு பெற வேண்டும்.


நன்னீர் ஏரியான இங்கிருந்து தான், தேனி மாவட்டம் பெரியகுளம் நகருக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள மதிகெட்டான் சோலை, தொப்பித்தூக்கும்பாறை, பேரிஜம் ஏரி வியூ ஆகியவற்றை பார்த்து ரசித்தப்படி சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பேரிஜம் ஏரி சாலை பகுதியில் 5 காட்டுயானைகள் குட்டிகளுடன் உலா வந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.


இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று முதல் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த பிறகே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்