திருச்சியில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.;
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இதில் ஆடி 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழாவானது காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையில் கொண்டாடப்படவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டதால் காவிரி கரையோரம் திரளான பக்தர்கள் பங்கேற்று காவிரித்தாயை வழிபட்டனர்.
அம்மா மண்டபம்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வந்து மிகுந்த மகிழ்ச்சி யோடு படித்துறையில் வழிபாடு நடத்தினார்கள். ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரை கண்டு பூரிப்படைந்தனர். வழக்கமாக ஆடிப்பெருக்கில் காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி முதல் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரும். ஆனால் இந்த ஆண்டு வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ஆடிப்பெருக்கில் இதுபோன்ற வெள்ளம் வந்தது இல்லை என கூறப்படுகிறது.
புனித நீராடி வழிபாடு
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். காலையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பின்னர் மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமானது. இந்த ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட திருச்சி மட்டுமில்லாமல் அரியலூர், பெரம்பலூர் உள்பட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் உற்சாகமாக வந்திருந்தனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடினர். இந்துக்களில் பெரும்பாலானோர் திருமணத்தன்று மணமக்கள் அணியும் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர்.
மஞ்சள் கயிறு கட்டி விட்டனர்
அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறைகளில் பக்தர்கள் வாழை இலை விரித்து படையலிட்டனர். அதில் மஞ்சள் பிள்ளையார், தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் உள்ளிட்ட பொருட் களை வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி உள்பட மங்கல பொருட்களை வைத்தும், மஞ்சள் கயிறுகளையும் வைத்திருந்தனர்.
வீட்டில் மூத்த சுமங்கலி பெண்கள் அந்த படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பய, பக்தியுடன் கும்பிட்டனர். தீபாராதனையை படையலுக்கு காண்பித்த பின் ஆற்றை நோக்கி காவிரித்தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்தனர். அப்போது தங்களது வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெருகவும், தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், விவசாயம் செழிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டியதை காணமுடிந்தது.
மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்தில் கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களுக்கு கழுத்திலும், இளைஞர்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். சுமங்கலி பெண்கள் தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் தாலி சரடுகளை மாற்றி கட்டி வீட்டில் மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசிபெற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
வழிபாடு நடத்திய பின் படையலில் இருந்தவற்றில் சிலவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு 2 பழம், பத்தி, மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை, பாக்கு திருமண மாலைகள் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தும், அதில் காணிக்கையாக காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தும் ஆற்றில் விட்டனர்.
அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீயணைப்பு வீரர்கள் பணியில் இருந்தனர். காலையில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் பகல் 1 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகமானது. மதியத்திற்கு பின் மாலையில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றில் வழிபாடு நடத்தினர்.
இதேபோல் கருடமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்த ஆண்டு தண்ணீர் அதிகமாக வந்ததால் ஆடிப்பெருக்கு விழாவை திருச்சியில் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.