தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்
தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்;
கோவை
தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஆலோசனை கூட்டம்
மத்திய அரசு 29 தொழிலாளர் நலச் சட்டங்களை உள்ளடக்கி 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உருவாக்கி உள்ளது. அந்த சட்டத்தில் தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப் படையில் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைகள் வரைவு விதி, ஊதியம் குறித்த
வரைவு விதி மற்றும் தொழில் உறவுகள் குறித்த வரைவு விதிகளை அரசிதழில் வெளியிட்டு தொழில் அமைப்புகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் கோவையில் உள்ள கூடுதல் இயக்குனர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குனர் ஆனந்த் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் பொன்னுசாமி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழில் வெளியிட வேண்டும்
கூட்டத்தில் வழங்கப்பட்ட வரைவு விதிகள் அனைத்தும் ஆங்கி லத்தில் இருந்தன. அப்போது தொழிலாளர்களுக்கான சட்ட தொகுப்புகளை தமிழில் வழங்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆறுமுகம், வால்பாறை தேயிலை தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை வி.அமீது மற்றும் தொழிற் சங்க தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தமிழில் மொழிபெயர்த்து தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய பிறகு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அடுத்த கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.