வடலூரில் அகற்றிய பெரியார், அம்பேத்கர் சிலைகளை உடனே நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
பெரியார், அம்பேத்கரின் சிலையை பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த இடத்தின் அருகிலோ அல்லது மாற்று இடத்திலோ மீண்டும் நிறுவ முயற்சி செய்யவில்லை.;
சென்னை,
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளலார் மண்ணான வடலூரில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சமூகநீதி கொள்கையை நிலைநாட்டி அந்த பகுதி மக்கள் ஆதரவுடன் நான் திறந்து வைத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
காலத்தின் தேவைக்கேற்ப சாலை விரிவாக்க பணி என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், சமூகநீதி தலைவர்களின் சிலைகளை இவ்வாறு அப்புறப்படுத்தி, இதுவரை மீண்டும் நிறுவாமல் மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு ஆட்சி நடத்தும் இந்த அரசு, திராவிட சித்தாந்தத்தின் மூச்சாக இருக்கும் தந்தை பெரியாரின் சிலையையும், நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்மூச்சாக இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த இடத்தின் அருகிலோ அல்லது மாற்று இடத்திலோ மீண்டும் நிறுவ முயற்சி செய்யவில்லை.
சிலைகளை மீண்டும் அமைப்பது சம்பந்தமாக பலமுறை அந்த பகுதி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தையும், உரிய அலுவலர்களையும் பல முறை தொடர்பு கொண்டும், இதுவரை சிலைகளை மீண்டும் அமைப்பதற்கான பணியையும் மேற்கொள்ளாமலும், அனுமதியையும் வழங்காமல் உள்ளனர்.
சமூகநீதியை கொள்கையாக கொண்ட அரசு சமூகநீதி தலைவர்களின் சிலைகளை உடனே பொதுமக்கள் பார்வையில் படும்படி அமைத்து, வருங்கால சந்ததிகளுக்கும் சமூக நீதி தலைவர்களை நினைவு கூரும்படி சரியான இடத்தில் உடனே மீண்டும் நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.