அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடலூர் சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்து – கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
ஒரே நொடியில் தங்களின் அன்பு உறவுகளை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.
இத்தகைய கொடூரமான விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில், அரசு பேருந்துகளின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.