எழும்பூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கொலை: 2 வக்கீல்களுக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் கோர்ட் வளாகத்தில் ஸ்டாலின் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-11-08 03:25 GMT

சென்னை,

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை எழும்பூர் வக்கீல் சங்க தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது வக்கீல்களில் இருதரப்பினர் கோர்ட்டு வளாகத்துக்குள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இதில் இருதரப்பும் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அங்கு இருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர் நீதிமன்ற அறைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த ஆவணங்களை கிழித்து எறிந்து, மேஜை, நாற்காலிகளையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் வக்கீல் ஸ்டாலின் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல்கள் மைக்கேல், சார்லஸ், ராஜேஷ் மற்றும் லோகேஸ்வரி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே மைக்கேல், ராஜஷே் ஆகியோர் உயிரிழந்தனர். எனவே மீதமுள்ள 15 பேர் மீதான வழக்கு தொடர்ந்து நடந்தது. இதில் லோகேஸ்வரி, சார்லஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், லோகேஸ்வரிக்கு ரூ.31 ஆயிரம் அபராதமும், சார்லசுக்கு ரூ.65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 13 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்