தவறுகள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை

ஓட்டல்கள், பேக்கரிகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் துறை சார்ந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-24 16:51 GMT


ஓட்டல்கள், பேக்கரிகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் துறை சார்ந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழா சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர்.

இதையொட்டி திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஓட்டல், பேக்கரி, ஸ்வீட் கடை, டீ கடை போன்றவற்றின் உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புகார் எண்

உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முறையாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று இருக்க வேண்டும். உணவு பொருட்களை கையாளுபவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்து இருக்க வேண்டும். அதற்கான சான்றினை கடையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் உணவு பொருட்களை கையாளுபவர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போட வேண்டும். கண்டிப்பாக அனைத்து ஓட்டல் மற்றும் கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண்ணான 9444042344 என்ற எண்ணை எழுதி வைத்திருக்க வேண்டும்.

நடவடிக்கை

குளிரூட்டும் எந்திரம் மூலம் பதப்படுத்தி விற்பனை செய்ய கூடிய பால் உள்ளிட்ட பொருட்களை முறையாக கையாள வேண்டும். குடிப்பதற்கு தகுந்த தண்ணீரில் மட்டுமே உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும்.

உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீரை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையையும் கடைகளில் வைத்திருக்க வேண்டும். திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போது தவறுகள் கண்டறியப்பட்டால் துறை சார்ந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஓட்டல்கள் சங்க மாவட்டத் தலைவர் தனக்கோட்டி, நகர தலைவர் ரங்கநாதன், உணவு பாதுகாப்பு அதிகாரி சிவபாலன் உள்பட மாவட்ட, நகர ஓட்டல் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்