உரிமம் பெறாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை

கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும் கம்பம் நகராட்சி ஆணையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-06 19:00 GMT

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவுமேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு அகற்றுதல் போன்ற பணிகளை கழிவுநீர் வாகனங்கள் மூலம் மேற்கொள்வதை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் அதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். மேலும், கோர்ட்டு மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கம்பம் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் வாகனங்ளுக்கு உரிமம் பெற வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் பாலமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்