அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

‘அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்’ என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2022-11-26 08:15 GMT

பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 57-வது வார்டுக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டாய், அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள உருது நடுநிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த இடத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சட்டத்தின் துணை கொண்டு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் 13 ஆயிரத்து 293 சதுர அடி பரப்பளவில் உள்ள பழமையான நாடக கொட்டாய் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோர் கலைத்துறைக்காக இந்த இடத்தை பயன்படுத்தி உள்ளனர். தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான திட்டம் வகுக்கப்படும்.

அதேபோல், அங்கப்ப நாயக்கன் தெருவில் சென்னை உருது நடுநிலைப்பள்ளிக்கு பின்புறம் 1,680 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் உருதுப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பைறைகள் கட்டப்பட உள்ளது. அரசின் சார்பில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்.

அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டு சிவராத்திரி திருவிழா 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது. ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.160 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் இருக்கின்ற நிலப்பரப்பில் சுமார் 40 சதவீதம் விளை நிலப்பரப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகவும், கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த நிலங்களை 50 ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி மற்றும் பேரிடர் பாதிப்புகளால் விவசாயம் பாதித்து வந்துள்ளது.

கோவில்களுக்கு, மடங்களுக்கு செலுத்தவேண்டிய குத்தகை பாக்கிகள், விளைச்சல் இல்லா காலங்களில் செலுத்த முடியாமல் உள்ளது. தற்போது நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரால் குத்தகை விவசாயிகளின் பதிவை ரத்து செய்தும், நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது. தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு நிவாரண பணிகளை பல துறைகள் மூலம் வழங்கி வருவதை கணக்கில்கொண்டு குத்தகை விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்