பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்
மொட்டை மாடிகளில் நீரும், உணவும் வைப்போம் பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம் என மனிதநேயர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.;
காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது.
சின்னஞ்சிறிய பறவைகள்
மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?. உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம். இதுகுறித்து மனிதநேய ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
நீங்களும் தொடங்குங்கள் இந்த கோடையில் இருந்து...
அரியலூரை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் அனிதா:- பறவைகள் நம்மைப்போன்ற உயிரினம் மட்டுமல்ல நம்மையும், இயற்கையையும் பாதுகாக்கும் ஓர் உயிரினம். அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை ஆகும். பறவைகள் நீர்நிலைகளையும், நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள விளைநிலங்களையும், மரங்களையும் உணவிற்கும் வாழ்விடமாகவும் கொண்டுள்ளது. கோடை காலங்களில் அறுவடை முடிந்திருக்கும் என்பதால் பறவைகளுக்கு தேவையான உணவு தானியங்கள் மற்றும் நீர் வறட்சி காரணமாக நீர்நிலையில் உள்ள மீன்களும் கிடைப்பது குறைவாகும். எனவே மனிதர்களாகிய நாம் பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பினை உணர்ந்து மாடிகளில் குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகில் வீடுகளின் மொட்டை மாடிகளில் நீர் மற்றும் தானியங்களை வைப்போம். பறவைகளை காப்போம் மனித நேயத்துடன் வாழ்வோம். நான் ஆண்டு முழுவதும் வைக்கிறேன். நீங்களும் தொடங்குங்கள் இந்த கோடையில் இருந்து.
உடையார்பாளையத்தை சேர்ந்த அகிலா ஜெகநாதன்:- மனிதர்கள் காடுகளை அழித்தும், குளம்-குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் குடியிருபுகளை உருவாக்கியதால் காட்டில் வாழும் மிருகங்களும், பறவைகளும் குடியிருப்புக்களை நோக்கி வரத்தொடங்கிவிட்டன. இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கி மனிதர்களையே வாட்டி வதைக்கும் பருவகாலங்களில் பறவைகள் நீருக்காக பரிதவிக்கும் அவலநிலைகளை கருத்தில் கொண்டு தனது இல்லங்களில் நீர்த்தொட்டிகள் உணவுதானியங்கள் வைத்து காகம், குருவி, கிளி, சிட்டுக்குருவி போன்ற ஜீவன்களை பாதுகாத்தால் நம்முடைய முன்னோர்கள் ஆசியும் கிட்டும், பாவங்களும் நீங்கும். அன்னசத்திரம் ஆயிரம் கட்ட நமக்கு வாய்ப்புகள் இல்லாதபோதும் நாம் பல்லுயிர்களை பாதுகாப்போம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் வார்த்தையை மதித்து ஜீவகாருண்யம் காப்போம்.
பணம் செலுத்த தேவையில்லை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, நல்லறிக்கையை சேர்ந்த மனிதநேய ஆர்வலர் பிரபாத் கலாம்:- கோடைக்காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் வந்து கொண்டு இருக்கிறது. அதனால், வன உயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழக்க நேருகிறது. "காக்கை குருவிகள் எங்கள் ஜாதி" என்ற பாரதியின் வரிகள் பறவைகள் மீதான அன்பினை வெளிப்படுத்தும் காலங்கள் கடந்தும் மனிதனுக்கும் பறவைகளுக்கும் உள்ள காதல் பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்து இன்று வீடுகளிலே உறவாக பறவைகளை வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதே நேரத்தில் வனத்திலே வாழும் பல பறவை இனங்கள் தங்களுடைய வாழ்க்கைச் சூழ்நிலையை இழந்து உயிர் வாழத்தவித்து கொண்டிருக்கிறது. ஆகையால், நாம் இந்த வன பறவையினங்களுக்கு பணம் செலுத்த தேவையில்லை. உங்களின் பார்வையை செலுத்தினாலே போதும். அதனை நிச்சயமாக நம்மால் பாதுகாக்க முடியும். நம் பார்வையில் தோன்றும் அந்த மனிதம் அந்த பறவைகளுக்கு உயிரோட்டமாக அமையும். நம்மால் முடிந்த வகையில் பறவை இனங்களின் உயிர் காக்க பொது இடங்களில் சிறிது உணவும், தண்ணீரும் வைப்போம். நம் இல்லங்களைத் தேடி வரும் இன்னுயிர்களைக் காப்போம்.
நாரணமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ்:- நான் தினந்தோறும் புறா, காக்கை மற்றும் கோழிகளுக்கு உணவு வைத்துவிட்டுதான் சாப்பிடசெல்வேன். எனது வீட்டில் மொட்டை மாடியில் பாத்திரம் வைத்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றிவைப்பேன். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே அவைகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இவ்வாறு நான் பாத்திரத்தில் வைக்கும் நீரை அவைகள் அருந்தி செல்கின்றன. இதேபோல் செய்வதினால் அவற்றின் உயிர் காக்கப்படுகிறது. இவ்வாறு நாம் செய்தோமானால் இயற்கை நமக்கு அளித்த பலன்களை நாம் முழுமையாக அடைவோம். எனவே என்னை போன்று அனைவரும் இதுபோன்ற நற்செயல்களை செய்து இந்த தேசத்தில் உள்ள உயிர்களை காப்பாற்றுவோம்.
மனதில் கொள்ள வேண்டும்
மறவனூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்:- எங்கே தொடங்கி, எங்கே முடியும் என்றே தெரியாத இந்த ஆச்சரியங்கள் நிறைந்த வானத்தைப் பார்த்து ஆச்சரியப் படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதுபோல வானத்தில் பறக்கும் பறவைகளை போல பறக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் நீண்ட ஆசையாக உள்ளது. நாம் அனைவரும் மனிதர்களை நேசிப்பதுபோல பறவைகளையும் நேசிக்க வேண்டும். பறவைகளுக்கு தண்ணீர் அளித்தல் மிக முக்கியம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இதனால் எனது வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல பறவைகளுக்கும் சிறு தொட்டி கட்டி தண்ணீர் ஊற்றி வைக்கிறேன். அதேபோல். பறவைகளுக்கு இயன்ற தானியங்களை உணவாக அளிக்கிறேன். பறவைகளையும் உயிராக, உறவாக, வளர்த்து அவற்றுடன் பேசி மகிழ்கிறேன். மனிதர்களை நேசிப்பது போல பறவைகளையும் நேசிக்கிறேன் என்று கூறினார்.
அண்ணங்காரம்பேட்டை விவசாயி குணாளன்:- காலப்போக்கில் பல பறவைகள் சென்ற தலைமுறைகளில் பார்த்த நிலையில் இந்த தலைமுறையினர் பார்ப்பது அரிதானதாக மாறிவிட்டது. பறவை இனங்கள் படிப்படியாக அழிந்து கொண்டே வருகின்றன. மனிதர்கள் தங்களது சுயநலத்திற்காக இயற்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீர்கெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது இருக்கக்கூடிய இயற்கை சூழ்நிலைகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பறவை இனங்கள் கோடை காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். பறவைகள் இயற்கையாகவே அவற்றிற்கு எந்தெந்த பருவ காலங்களில் எங்கெங்கு வாழக்கூடிய தன்மை இருக்குமோ அந்த இடத்தை நோக்கி பயணித்து சென்று விடுவது வழக்கம். ஆனால் அனைத்து இயற்கை காலநிலையிலும் இடப்பெயர்ச்சி அடையாமல் ஒரே இடத்தில் தங்கி வாழக்கூடிய பறவைகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படும். மனிதர்கள் இந்த சூழ்நிலையில் நம்மோடு சமகாலத்தில் வாழ்ந்து வரும் பறவைகள் அழிந்து விடாமல் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு பறவைகளை அடையாளம் காட்டி செல்வதற்கும் நிச்சயம் இயற்கையோடு சேர்ந்து நாமும் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில் நமது வீட்டின் மொட்டை மாடிகளிலும், ஓட்டு வீடு அல்லது கூரை வீடாக இருந்தால் கூட வீட்டின் முகப்பு பகுதிகளிலும், தோட்டங்கள் மற்றும் வயல்களிலும் பறவைகள் வந்து அமர்ந்து தண்ணீர் அருந்தும் வகையிலான அமைப்பை ஏற்படுத்தி அவற்றுக்கு குடிக்கவும் குளிக்கவும் தகுந்தார் போல் தொடர்ந்து அந்த தண்ணீர் குளிர்ச்சியாகவே இருக்கும் படியான நிகழ்வு பாங்கான இடத்தில் தண்ணீரை வைக்க வேண்டும். இதன் மூலமாக பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு நமது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். நம்மோடு வாழும் பிற ஜீவராசிகளை காப்பது நமது கடமை.
கூடு கட்டி குஞ்சுகள் பொறிக்கவும் வாய்ப்பு
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் வங்கி அலுவலரும், பறவை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பாண்டிகண்ணன்:- நான் பறவைகள் கண்காணிப்பு குழு (பேர்ட்ஸ் வாட்ச்) என்ற வாட்ஸ்-அப் குழுவில் பலரையும் இணைத்து, சுற்று சூழலை பேணிக்காத்தல் மியாவாகி ஜப்பானியமுறையில் காடுகள் வளர்த்தலை ஊக்குவித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலேயே சற்று குளிருடன் வெப்பமும் அதிகரித்து வருவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் மியாவாகி காடுவளர்ப்பிற்கு அருகே வசிப்பவர்களிடம் கோடைகாலத்தின் போது ஏறத்தாழ 100 ஜோடிகள் என இரண்டு மண் கலயங்கள் கொடுத்து வருகிறேன். அதில் ஒன்றில் அரிசி, கம்பு உள்ளிட்ட தானியங்களை பறவைகள் உட்கொள்வதற்காக இருதினங்களுக்கு ஒருமுறை வைக்கப்படும். மற்றொரு கலயத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும். தண்ணீரைப் பார்த்த பறவைகள் மண் கலயத்திற்கு அருகே வந்து சிறு தானியங்களை உட்கொண்டு விட்டு நீர் அருந்தி செல்லும். அருகிலுள்ள காடுகள் அல்லது வீடுகளில் உள்ள தாவரங்களில் சரியான சூழலில் கூடு கட்டி குஞ்சுகள் பொறிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் பறவைகள் சந்தோஷமடைந்து பல்கிப் பெருகி நமது சுற்றுச்சூழலை பேணி காப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. பறவைகள் நம்மிடம் ஏற்படும் மன இறுக்கத்தை குறைத்து நம்மை மகிழ்ச்சியடைய வைக்கின்றன. அதிலும் புல்புல் என்ற பறவை மனிதர்களைக் கண்டு அவ்வளவாக பயப்படாது.
இயற்கைக்கு செய்யும் கைமாறு
வீடுகளில் மண் கலயங்களில் தானியங்கள் மற்றும் தண்ணீர் வைத்தால் புல்புல் பறவைகள் தானியத்தை உட்கொண்டு நீர் அருந்திவிட்டு வீடுகளில் உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டும். சிறிய அட்டைப்பெட்டியில் துவாரம் இட்டு வைத்தால் அதிலும் புல்புல் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்து தமது சந்ததியை பெருக்கும். ஆகவே அதற்கானசூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுப்புற சூழல் மேம்பாடு அடைவதுடன் நாம் இயற்கைக்கு செய்யும் கைமாறாக அமையும். பறவைகளுக்கு தானியம், தண்ணீர் வைப்பதால் அவற்றை உட்கொள்ளவீடு தேடி வரும் தேன்சிட்டுவை கையில் எடுத்து பாண்டி கண்ணனின் வீட்டு மழலையர் அக்கம்பக்கத்து சிறுவர் சிறுமியருடன் அவ்வப்போதுகொஞ்சி விளையாடி மகிழ்கின்றனர்.