மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை அறிய வாழ்வாதார உதவி எண்

மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்களை அறிய வாழ்வாதார உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-02 18:29 GMT

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், ஐயப்பாடுகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தஅழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். இந்த அழைப்பு எண்ணை தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

குறிப்பாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல்/ பெறுதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம். மேலும், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். எனவே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்