வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதால் வாழ்வாதாரம் பாதிப்பு:பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை

தென்னை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-30 19:00 GMT

பொள்ளாச்சி

தென்னை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் தென்னை சார்ந்த தொழில்களை செய்து வரும் தொழிலாளர்களின் நலன் காக்க தென்னை தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்களை தொழிற்சாலைகளில் பணியமர்த்துவதால் தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அகதிகளாக மாற வாய்ப்பு உள்ளது.

அதனால் இதனை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை தொழிலாளர்கள் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதன் காரணமாக சப்-கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டு, இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு சிலர் மட்டும் அலுவலகத்தின் உள்ளே சென்று சப்-கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி, தென்னை தொழிலாளர் முன்னணியினர் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் நல வாரியம்

தென்னை தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். தென்னை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு மருத்துவ காப்பீடு (இ.எஸ்.ஐ.), வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) ஆகியவற்றை நிர்ணயம் செய்து தொழிலாளர் ஈட்டுறுதி வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும்.

நலிந்து வரும் தென்னை தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கி வேலை செய்வதால் இங்கு உள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய் விடும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் தொழிலாளர்கள் சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, கூலியை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்