439 வழக்குகள் ரூ.16¾ கோடியில் சமரச தீர்வு

திருப்பூர் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 439 வழக்குகள் ரூ.16¾ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் விபத்தில் காலை இழந்த வாலிபருக்கு ரூ.52½ லட்சம் இழப்பீடு பெற ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-07-08 16:05 GMT

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் மொத்தம் 7 அமர்வுகளாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில் பல்லடம் பி.வடுகபாளையம் பகுதியை சேர்ந்த சக்திபிரவீன் (வயது 26) என்பவர் பல்லடத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த 29-5-2022 அன்று கோவை-திருச்சி ரோட்டில் சோளியப்பகவுண்டன் புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சக்தி பிரவீன் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் அவருடைய வலது கால் துண்டானது. இதற்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

ரூ.52½ லட்சம் இழப்பீடு

தனக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனு செய்து இருந்தார். இந்த வழக்கு நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவருக்கு ரூ.52½ லட்சம் வழங்க நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தினர் ஒப்புக்கொண்டதால் சமரச தீர்வு காணப்பட்டது.

அதற்கான ஆணையை மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் சக்தி பிரவீனிடம் வழங்கினார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடினார். காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் வக்கீல் பாலாஜிகிருஷ்ணன் உடனிருந்தார்.

ரூ.16¾ கோடிக்கு சமரசம்

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,226 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 439 வழக்குகளுக்கு ரூ.16 கோடியே 81 லட்சத்து 45 ஆயிரத்து 511 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் 53 சிவில் வழக்குகள், 8 குடும்ப நல வழக்குகள், 156 சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், 11 காசோலை மோசடி வழக்குகள், 54 வங்கி வராக்கடன் வழக்குகள் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், விரைவுநீதிமன்ற நீதித்துறை நடுவர் ரஞ்சித்குமார், வக்கீல்கள் ரகுபதி, பத்மநாபன், பாலகுமார், மோகன், பாலாஜி கிருஷ்ணா, மல்லிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்