மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி உரிமையாளர் பலி

திருவட்டார் அருகே திருமணமான 8 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி உரிமையாளர் பலியானார்.

Update: 2023-09-24 18:45 GMT

திருவட்டார்,

திருவட்டார் அருகே திருமணமான 8 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி உரிமையாளர் பலியானார்.

லாரி உரிமையாளர்

திருவட்டார் அருகே உள்ள வேர்க்கிளம்பி இலுப்பகாலவிளையைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மகன் நவீன் (வயது 29). இவர் வேர்க்கிளம்பியில் காய்கறி கடை நடத்தி வந்தார். பின்னர் காய்கறி கடையை விட்டு விட்டு தற்போது சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வந்தார்.

இவருடைய மனைவி ஜெயந்தி ஜீவமலர் (29). கடந்த 8 மாதத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது ஜெயந்தி ஜீவமலர் கர்ப்பிணியாக உள்ளார். பின்னர் தேவதானபுரத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

விபத்தில் சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவியை பார்ப்பதற்காக தேவதானபுரத்துக்கு நவீன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பூவன்கோடு பகுதியில் சென்றடைந்த போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியின் கையில் மோட்டார் சைக்கிள் மோதியது.

அந்த சமயத்தில் நவீன் திடீரென பதற்றமடைந்தார். இதனால் மோட்டார் சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் பூவன்கோட்டில் இருந்து வடக்குநாடு நோக்கி செங்கோடி வலிய மங்காட்டுவிளையை சேர்ந்த ஜெபகிதியோன் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து கிடந்த நவீன் கழுத்தின் மீது ஏறி சென்றது.

இந்த விபத்தில் நவீன் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி உரிமையாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்