பூங்கா, தியேட்டர்களில் குவிந்த காதல் ஜோடிகள்

திண்டுக்கல், கொடைக்கானலில் காதலர் தினத்தை கொண்டாட பூங்கா, தியேட்டர்களில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

Update: 2023-02-14 19:00 GMT

காதலர் தினம்

அன்பின் அரவணைப்பில் இரு மனங்கள் இணைந்து காதல் உருவாகிறது. காதல் எனும் மூன்றெழுத்தை உச்சரிக்கும் போதே இனம்புரியாத உணர்வு ஏற்படுவதே காதலின் மகத்துவம். அனைத்து உயிர்களையும் அசாத்தியமாக கட்டிப்போடும் அற்புத கயிறு காதல் ஆகும். இத்தகைய காதலை கொண்டாடும் வகையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காதலர்கள் பொழுதுபோக்கு இடங்களில் கூடி அன்பை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினர். இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை திண்டுக்கல் மலைக்கோட்டை காதலர்களின் புகலிடமாக இருந்தது. இதனால் நேற்றைய தினம் காலையில் மலைக்கோட்டை திறந்த உடனே காதல் ஜோடிகள் மலைக்கோட்டைக்கு படையெடுத்தனர்.

ஆனால் காதலர் எதிர்ப்பு தின போராட்டம் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தால், ஜோடியாக வந்தவர்களை மலைக்கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பல காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரம் ஒருசில ஜோடிகள் முன்கூட்டியே உஷாராகி இளம்பெண்கள் தனியாகவும், இளைஞர்கள் தனியாகவும் மலைக்கோட்டைக்குள் சென்றனர். பின்னர் அங்கு ஜோடிகளாக சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடினர்.

பூங்கா, தியேட்டர்கள்

மேலும் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள குமரன் பூங்கா காதல் ஜோடிகள் குவிந்தனர். அதில் பலர் கல்லூரி மாணவிகள் போன்றே தெரிந்தனர். காதலிக்கு காதலன் ரோஜா பூ கொடுத்தும் கேக் மற்றும் மிட்டாய் ஊட்டிவிட்டும் அன்பை வெளிப்படுத்தினர். இளம்ஜோடிகள் மட்டுமின்றி காதலித்து திருமணம் செய்த புதுமண தம்பதிகளும் பூங்காவுக்கு வந்து காதலர் தினத்தை கொண்டாடி குதூகலித்தனர்.

இதுதவிர திண்டுக்கல்லில் உள்ள பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் காதல் ஜோடிகளே அதிகம் கண்ணில்பட்டனர். இதற்காக காதலனுடன் மோட்டார் சைக்கிள்களில் காதலிகள் வந்தனர். மேலும் பெற்றோர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் பார்த்துவிடாமல் இருப்பதற்காக இளம்பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி வந்தனர். மேலும் கல்லூரிகள் அமைந்த பகுதிகளில் இளைஞர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த மாணவியிடம் காதலை தெரிவிக்க கால்கடுக்க காத்திருந்த காட்சிகளும் ஆங்காங்கே அரங்கேறியது.

கொடைக்கானல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் காதலர் தினத்தையொட்டி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் காதலர்கள் கூட்டம் அலைமோதியது.

அதில் ரோஜா பூங்காவில் இதயம் போன்று பூக்களால் வடிவமைக்கப்பட்டதற்கு முன்பு நின்று காதல் ஜோடியினர் மற்றும் புதுமண தம்பதியினர் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர். பிரையண்ட் பூங்காவில் பூக்களால் தாஜ்மகால் போன்று அமைக்கப்பட்டு இருந்தது.

அதன் முன்பு நின்று காதலர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் காதல் ஜோடியினர் பூங்காக்களில் பூத்திருந்த வண்ண மலர்களை பார்த்து ரசித்தனர். காதலர்தினத்தையொட்டி நேற்று காலை முதலே காதலர்கள் மற்றும் புதுமண தம்பதிகளின் வருகையால் கொடைக்கானல் களைகட்டியது.

Tags:    

மேலும் செய்திகள்