இதற்கெல்லாம் விவாகரத்து கேட்பதா? வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.

Update: 2024-01-02 06:36 GMT

சென்னை:

மதுரையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜூடிலதா. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) சுரேசுக்கு, ஜூடிலதா அத்தை (அப்பாவின் தங்கை) மகள் ஆவார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜூடிலதாவிடம் இருந்து சுரேஷ் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இவர் கூறும் காரணங்களை ஏற்க முடியாது என்று கூறி அவரது வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளது. இதை நேரில் பார்த்ததால், மனைவி விஷம் குடித்து விட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினேன். இதனால், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறேன். இது மனரீதியாக செய்யும் கொடுமை ஆகும். அதனால் விவாகரத்து வேண்டும் என்று சுரேஷ் கூறியுள்ளார்.

ஆனால், சுரேஷ் மீது போலீசில் அவரது பெரியப்பா கொடுத்த புகார் மீதான விசாரணையில், மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுல்ல, மனைவியுடன் கள்ளத்தொடர்பில் உள்ள நபரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. தற்கொலைக்கு முயன்ற மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ ஆவணங்கள், தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு விவரங்கள் ஆகியவற்றை சுரேஷ் தாக்கல் செய்யவில்லை.

குடும்ப பிரச்சினை தொடர்பாக சுரேஷின் பெரியப்பா போலீசில் புகார் செய்துள்ளார். அதனால், கடந்த 2018-ம் ஆண்டுதான் ஜூடிலதாவை சுரேஷ் பிரிந்துள்ளார். ஆனால், 2014-ம் ஆண்டே பிரிந்ததாக கூறி 2019-ம் ஆண்டு விவாகரத்து கேட்டு சுரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால்தான், இந்த வழக்கை கீழ் கோர்ட்டு சரியாக நிராகரித்துள்ளது.

மேலும், ஜூடிலதாவின் சகோதரர் திருமண அழைப்பிதழில், சுரேஷின் அண்ணன், அவரது மனைவி ஆகியோரது பெயர் இடம்பெறவில்லை. இதனாலும், கணவன், மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. அதேபோல, சுரேஷின் அண்ணன் குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், சுரேஷ், ஜூடிலதா பெயர்கள் இடம் பெறவில்லை. இதனாலும், கணவன்-மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அதனால், காது குத்தும் நிகழ்ச்சி நடந்த கோவிலுக்கு இருவரும் சென்றாலும், காதுகுத்தும் நிகழ்ச்சியில் ஜூடிலதா கலந்து கொள்ளவில்லை.

இந்த வழக்கில் இறுதியாக கூறப்படும் காரணம்தான் மிகப்பெரியது. ஜூடிலதாவின் அம்மாவின் தந்தை, சுரேசுக்கு அப்பாவின் தந்தை ஆவார். இவர் இறந்து விட்டார். பெரியப்பாவுடன் உள்ள முன்விரோதம் காரணமாக, தாத்தாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக்கூடாது என்று மாமியாரிடம் சுரேஷ் கூறியுள்ளார். ஆனால், மாமியார் கேட்காமல், தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.

இதையும் ஒரு காரணமாக கூறி சுரேஷ் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். மாமியார் மதிக்கவில்லை என்பதற்காக மனைவியிடம் சுரேஷ் விவாகரத்து கேட்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

குடும்பத்தில் நடக்கும் இதுபோன்ற சிறு, சிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. இதை எல்லாம் கீழ் கோர்ட்டு சரியாக பரிசீலித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால், இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்