மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டப மேல்தளத்தில் விரிசல் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டப மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-16 07:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன நினைவு சின்னங்கள் உள்ளன. இந்த நிலையில் இங்கு பெருமளவில் காணப்படும் குடைவரை கோவில்களில் ஒன்றே தற்காலத்தில் பஞ்சபாண்டவர் மண்டபம் என்று அழைக்கப்படும் குடைவரை கோவிலாகும். இது கட்டிமுடிக்கப்படாத ஒரு குடைவரை கோவில் வகையை சேர்ந்ததாகும். 3 சார்பு உடையதாக அமைந்துள்ள இதன் அமைப்பை பார்க்கும்போது, நடுவில் கருவறையையும், சுற்றிலும் மண்டபத்தையும் கொண்ட ஒரு பெரிய கோவிலாகவே திட்டமிடப்பட்டு பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்டதாகும். இதன் முகப்பு பகுதி 6 முழுத்தூண்களையும், 2 அரைத்தூண்களையும் கொண்டுள்ளது.

இதன் பின்னால் இதே போன்ற இன்னொரு தூண்வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் வரும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மகாபாரத கதைகளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த பஞ்சபாண்டவர் மண்டபத்தை ஆர்வத்துடன் சுற்றி பார்த்து விட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த மண்டபத்தில் மேல் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலில் உள்ள ஓட்டை வழியாக மழை நீர் கசிகிறது. மழைக்காலங்களில் சுற்றுலா வரும் பயணிகள் நீர் கசிவு பகுதியை பார்த்துவிட்டு அதனை சீரமையுங்கள் என்று தொல்லியல் துறை பணியாளர்களிடம் சொல்லிவிட்டு செல்வதை காண முடிகிறது.

எனவே தொல்லியல் துறை நிர்வாகத்தினர் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்