மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரில் தேசிய மாணவர் படை மாணவர்களின் தூய்மை பணி

மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரில் தேசிய மாணவர் படை மாணவர்களின் தூய்மை பணி நடந்தது.

Update: 2022-11-24 18:45 GMT

மாப்பிள்ளையூரணி:

தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை மாணவர்களின் தூய்மை பணியை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூய்மைப்பணி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரேஸ்நகரில் மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் சார்பில், வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தேசிய மாணவர்படையை சேர்ந்த மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேசிய மாணவர்படை மாணவர்களோடு சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், தெற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கணக ரத்தினமணி, பள்ளி நேர்முக உதவியாளர் சாகுல்அமீது, தேசிய மாணவர் படை அதிகாரி ஜீஸஸ் ஆல்பன், கவுதம், ஆகியோா் ஏற்பாடு செய்து இருந்தனா்.

புதிய பஸ் போக்குவரத்து

கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை அரசு பஸ் வந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை வாஞ்சிமணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆரம்பசுகாதார நிலையத்தில் ஆய்வு

இதை தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்காதவாறு பணியாற்றுமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்