நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மேயர் ஆய்வு

நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் மேயர் ஆய்வு நடத்தினார்.;

Update:2023-04-02 01:03 IST

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஜங்ஷன், இ.பி.ரோடு, சத்திரம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லங்களை மேயர் அன்பழகன் நேற்று முன்தினம் பார்வையிட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் உணவு வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற வசதிகள் உள்ளனவா? என கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில் திருச்சி மாநகராட்சியில் புதிதாக உறையூர், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் இடவசதிக்கேற்ப தலா ரூ.1 கோடி மதிப்பில் 3 இடங்களில் ஆதரவற்றோர் முதியோர் தங்கும் இல்லங்கள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்சி மாநகரில் பாலக்கரை துணை நீரேற்று நிலையம் மற்றும் குதுப்பாபள்ளம் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் அறிவுசார் மையங்கள் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தலா ரூ.2½ கோடியில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவற்றின் கட்டுமான பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அதிகாரிகளுடன் சென்று, நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்