நீர்நிலைகளை தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்

மசினகுடி, கல்லட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

Update: 2023-01-10 18:45 GMT

கூடலூர், 

மசினகுடி, கல்லட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

பசுந்தீவன தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் மசினகுடி, கல்லட்டி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் வறண்ட காலநிலை காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள், பொதுமக்கள் வளர்க்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதேபோல் நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் நீர்நிலைகளைத் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த வழியாக சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

நீர்நிலைகளில் வன விலங்குகள்

இந்தநிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம்பெயர்ந்து செல்கின்றன. வழக்கமாக மசினகுடி, மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயாறு ஆகிய சாலையோரங்களில் வனவிலங்குகள் தென்படுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் காட்டு யானை ஒன்று சுமார் 70 அடி உயர செங்குத்தான கல்லட்டி மலைப்பாதையில் உள்ள அருவியில் தண்ணீர் குடிக்க லாபகமாக நடந்து சென்றது. வழக்கமாக வனவிலங்குகள் நடமாட்டம் அப்பகுதியில் இல்லாத சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தண்ணீர் குடிக்க ஆபத்தான இடத்தில் காட்டு யானை நடந்து சென்றது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இருப்பினும் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்