நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில்காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுமாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்
நாமக்கல் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அமைச்சர் ஆய்வு
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகர் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேற்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். இதையடுத்து அவர் பள்ளிக்கூடத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுகிறதா? உணவு தரமாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா ? என கேட்டறிந்தார். மேலும் காலை எத்தனை மணிக்கு உணவு வழங்கப்படுகிறது? எனவும், எத்தனை மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள்? என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
தொடர்ந்து அந்த பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுகாதாரமான முறையில் அவற்றை பராமரிக்க அறிவுறுத்தினார்.
பள்ளி ஆயத்த முகாம்
இதனைத்தொடர்ந்து நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்றுவிக்கும் முறைகள், குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், நகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.