1000 ஏக்கரில் பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து 1000 ஏக்கரில் பெரிய அளவில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

Update: 2022-09-28 18:45 GMT

தமிழகத்தில் மத்திய அரசுடன் இணைந்து 1000 ஏக்கரில் பெரிய அளவில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

தொடக்க விழா

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கோ -ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து புதிய ஆடை ரகங்களை பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆட்சி காலங்களில் கோ-ஆப்டெக்ஸில் நடந்த விற்பனையை காட்டிலும் அதிக அளவில் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் கைத்தறி துறை நவீன மயமாக்கப்பட்டு விற்பனை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் ரகங்கள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது.

இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 155 கோ -ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. தமிழகத்தில் 105 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் 49 கடைகள் உள்ளன. இக்கடைகளை மேம்படுத்த தனியார் நிறுவன ஆலோசனைக் குழு மூலம் நவீனமயமாக்கப்பட்டு விற்பனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு முயற்சியால் தற்போது நூல் விலை குறைந்துள்ளது. நெசவாளர்களுக்கு கூலி உயர்வை இதுவரையில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் 210 சிறிய ஜவுளி பூங்காக்கள் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து ஜுவுளி பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் 100 ஏக்கர் மற்றும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெரிய ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆர்கானிக் நைட்டிகள்

ஆர்கானிக் ஆடைகள் முதலாவதாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு வரவேற்பு இருப்பதால் தற்போது பெண்களுக்கான ஆர்கானிக் நைட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கைத்தறி துறை இணை இயக்குனர் கிரிராஜன், கோ- ஆப்டெக்ஸ் முதன்மை பொது மேலாளர் ஆலோக் பலேலே, பொது மேலாளர் பாலசுப்ரமணியன், மண்டல மேலாளர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத் (ராணிப்பேட்டை), ஹரிணி தில்லை (வாலாஜா), ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், நகர மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, கோ- ஆப்டெக்ஸ் ராணிப்பேட்டை மேலாளர் ஞானபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்