காணாமல் போன குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு

தியாகதுருகத்தில் காணாமல் போன குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

Update: 2022-12-03 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(வயது 30) தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவி, அகிலேஷ்(2) என்ற மகன், அர்சிதாஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஜெயச்சந்திரன் வேலைக்கு சென்றுவிட்டார். அர்ஷிதாஸ்ரீ-க்கு உடல்நிலை சரியில்லாததால் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அகிலேசை தியாகதுருகம் பேட்டை தெருவில் உள்ள தனது அக்கா அம்சவள்ளி வீட்டில் சத்யா விட்டு சென்றார்.

அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த அகிலேஷ் நடந்து சென்று கடைவீதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே அழுது கொண்டிருந்தான். அவனிடம் அங்கு நின்றவர்கள் விசாரித்த போது அந்த குழந்தை யாருடைய குழந்தை என்பது தெரியாததால் அவனை தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். உடனே போலீசார் அகிலேஷின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இதைப் பார்த்த பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அகிலேசின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சத்யா தனது உறவினர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி அகிலேசை அவரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்