பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு

வந்தவாசி அருகே பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-10 11:31 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே சு.காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 53), இவரது மகன் அன்பழகன் (23), பட்டப்படிப்பு படித்துள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் பூபதி (23), இருவரும் நண்பர்கள். கடந்த மாதம் 15-ந் தேதி இருவரும் மோட்டார்சைக்கிளில் வந்தவாசிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை பூபதி ஓட்டினார். வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் ேமாட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அன்பழகன், பூபதி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பூபதி மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 19-ந் தேதி தலைப்பகுதியில் அதிக வலி ஏற்பட்டதால் அன்பழகன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்