திருச்செங்கோடு அருகே பயங்கரம்: அம்மிக்கல்லால் தாக்கி மாமியார் படுகொலை தொழிலாளி கைது
திருச்செங்கோடு அருகே அம்மிக்கல்லால் தாக்கி மாமியார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே அம்மிக்கல்லால் தாக்கி மாமியார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காதல் திருமணம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 40). கணவனை பிரிந்து வாழும் கூலித்தொழிலாளியான இவருக்கு ஆர்த்தி (21) என்ற மகளும், வசந்தகுமார் (17) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த கார்த்தி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அவர்கள் திருச்செங்கோடு அருகே மாங்குட்டைபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையே திருமணமான ஒரு மாதத்தில் கார்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆர்த்தி கணவரை பிரிந்து கருவேப்பம்பட்டியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். எனவே கார்த்தி தனியாக வசித்து வந்தார்.
தகராறு
இதற்கிடையே பிரிந்து சென்ற மனைவியை திரும்ப அழைப்பதற்காக கார்த்தி அடிக்கடி கருவேப்பம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். ஆனால் அங்கு மாமியார் கோகிலாவுக்கும், கார்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. எப்படியாவது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என எண்ணிய கார்த்தி, கோகிலாவின் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கினார்.அப்போது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது, மாமியார் கோகிலா தடை போட்டு தகராறு செய்தார். இதனால் விரக்தி அடைந்த கார்த்தி, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு மாமியார் தடையாக இருப்பதை எண்ணி கோபம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து மாலையில் அவரை அழைத்து வருவதற்காக தம்பி வசந்தகுமார் சென்று விட்டார்.
அடித்துக்கொலை
அந்த சமயம் கார்த்தி மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து மாமியார் கோகிலாவை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோகிலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கார்த்தி வீட்டு வாசலில் வந்து அமர்ந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டு வாசலில் இருந்த கார்த்தியை கைது செய்தனர். மேலும் தகவல் அறிந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து கொலையுண்ட கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமியாரை, மருமகனே அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.