எருமப்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை மைத்துனர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

எருமப்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மைத்துனரை கைது செய்த போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-08-06 22:11 IST

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மைத்துனரை கைது செய்த போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

விவசாயி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). விவசாயி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு முருகேசன் (51) என்ற அண்ணணும், சரவணன் (41) என்ற தம்பியும் உள்ளனர். இதில் முருகேசனுக்கு திருமணமாகி தமிழ்செல்வி (40) என்ற மனைவி உள்ளார். சரவணனுக்கு திருமணமாகவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் முருகேசன், அவருடைய மாமனார் மோகன் (65) இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனநலம் பாதித்த முருகேசன் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அண்ணன், தம்பிகளுக்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலம் கெஜகோம்பையில் உள்ளது. இந்த சொத்தை அடைய நினைத்த தமிழ்ச்செல்வி மற்றும் அவருடைய தம்பி கேசவன் (32) மற்றும் தமிழ்ச்செல்வி தந்தை மோகன் ஆகியோர் செல்வராஜிடம் உன் தம்பிகளுக்கு இனியும் திருமணம் நடக்காது. எனவே 12 ஏக்கர் நிலத்தை தங்களது பெயருக்கு எழுதி வைக்கும்படி கேட்டார்களாம்.

கொலை

இதன் காரணமாக முருகேசன், அவருடைய மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜ் கெஜகோம்பையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தோட்டத்திற்கு அருகே உள்ள கரும்பு தோட்ட பகுதியில் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் செல்வராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபத்தில் இருந்த தமிழ்செல்வி, கேசவன், மோகன் மற்றும் கன்னியப்பன் ஆகியோர் தோட்டத்துக்கு சென்ற செல்வராஜை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேசவனை கைது செய்த போலீசார் தலைமறைவான தமிழ்செல்வி, மோகன் மற்றும் கன்னியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் விவசாயியை அண்ணி குடும்பத்தினரே இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்