இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால்நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றோம்கைதான 6 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்
சேந்தமங்கலம்:
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால் நிதி நிறுவன அதிபரை கடத்தி கொன்றதாக கைதான 6 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இரட்டிப்பு பணம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் குமரிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் கொல்லிமலையில் உள்ள தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலையாளிகள் கொல்லிமலையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த நாகராஜ், வினோத், ஜோசப், கவின், நவீத், நிஷாந்த் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் நிதி நிறுவன அதிபர் சரவணன், நாகராஜ், வினோத் ஆகியோரிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கினார். இதை தொடர்ந்து சுமார் 4 வாரங்களில் அந்த பணத்திற்கு இரட்டிப்பு தொகையை வழங்கினார். இதை தொடர்ந்து நாகராஜ், வினோத் மீண்டும் சரவணனிடம் ரூ.10 லட்சம் கொடுத்தனர். ஆனால் ரூ.10 லட்சத்திற்கான இரட்டிப்பு தொகையை வழங்காமல் சரவணன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ், வினோத் சரவணனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கைது
இதையடுத்து 2 பேரும் சரவணனிடம் நைசாக பேசி கொல்லிமலைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு தங்கும் விடுதியில் உள்ள அறையில் சரவணனை அடைத்து வைத்து பணத்தை எப்போது திருப்பி தருவாய் என்று கேட்டு மிரட்டி உள்ளனர். மேலும் நாகராஜ் நண்பர்களான நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப், கவின் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த நவீத், நிஷாந்த் ஆகியோரை வரவழைத்து சரவணனை மிரட்டி உள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் திடீரென சரவணனை அனைவரும் சேர்ந்துதாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் இறந்தார். இதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி தங்களை கைது செய்து விட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.