நெல்லை அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் மையம் சிறப்பாக செயல்படுகிறது-சபாநாயகர் அப்பாவு பாராட்டு

நோய் பாதித்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Update: 2023-10-20 19:15 GMT

நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியின் மண்டல கேன்சர் மையம் சார்பில் மார்பக புற்றுநோயை வென்றவர்கள் வெற்றி விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புற்றுநோய் மையம் புற்று நோய் பாதித்தவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மருத்துவத்துறை எவ்வளவோ வளர்ந்து விட்டது. அந்த காலத்தில் பிரசவம் பார்க்க மருத்துவச்சி என்று ஒருவர் இருப்பார். அவர் சொல்வதே வேதவாக்கு. ரத்த வாந்தி ஏற்பட்டால் பேய் அடித்து விட்டதாக கூறி இருந்த காலம் உண்டு.

சமூக புரட்சி

தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் கல்வி வளர்ச்சி, சமூக புரட்சி ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார், காமராஜர், அண்ணா கருணாநிதி ஆகியோர் எடுத்த முயற்சியால் மருத்துவதுறையில் வளர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் தான் பெண் கல்வி அதிகம்.

இந்தியாவில் 704 மருத்துவ கல்லூரியில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 74 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு மருத்துவமனை கல்லூரிகள், 36 தனியார் மருத்துவக் கல்லூரிகள் 38-ம் உள்ளன. தமிழகத்தை விட மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் கூட 68 மருத்துவ கல்லூரிகள் தான் உள்ளன. அந்த அளவிற்கு தமிழகம் சிறந்து விளங்குகிறது.

இவர் அவர் கூறினார்.

முன்னதாக ஆஸ்பத்திரியில் நுண்ணுயிர் புற்றுநோய் கருவியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுந்தரம், தெய்வநாயகம், ஆறுமுகம், முகமதுரபிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்