சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது - அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Update: 2022-09-25 18:45 GMT

கோவை

கோவையில் அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கு

தமிழகத்தில் நடந்து உள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்?, ஏனென்றால் குறிப்பாக சட்டத்தை அவர்கள் தங்கள் கையில் எடுத்து உள்ளனர். அவர்களுக்கு கோரிக்கை இருந்தால் அதை மாவட்ட கலெக்டர் அல்லது போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுத்து தெரிவித்து இருக்கலாம்.ஆனால் அதை செய்யாமல் சாலை மறியலில் ஈடுபடுவது, குறிப்பாக சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர். இதனால் பா.ஜனதா நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருக்கிறார்கள். எனவே சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது.

தவறான தகவல்கள்

கோவையில் ஏதோ பதற்றமான சூழ்நிலை நிலவுவதுபோன்று சமூக வலைத்தளத்தில் தவறாக பல தகவல்கள் பரவி வருகிறது. கோவையை பொறுத்தவரை எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 நிமிடங்கள் மட்டும்தான் மின்தடை ஏற்பட்டது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்